skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/05
மணியே மணியின்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:24 ராகம்:கானடா
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே.
நவரத்தினமே! நவரத்தின ஒளியாக இருப்பவளே! ஒளி வீசும் நவரத்தினங்களால் தொடுக்கப்பட்டு அணியக்கூடிய மாலையாக இருப்பவளே! அணியும் அந்த மாலையின் அழகாகவும் பொலிபவளே! உன்னைத் தெய்வமென நம்பி அண்டாதவர்களுக்குத் தீராத துன்பமாக இருப்பவளே! உன்னைத் தெய்வமெனச் சரணடைந்த உடனே அத்தனை துன்பமும் தீரக் காரணமாக இருப்பவளே! பிறவாப் பேறு பெற்றவர்களின் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாக இருப்பவளே! உன் திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு எவரையும் வணங்க மாட்டேன்.
மணியே என்பதற்கு முத்து, பவழம் என்று தனிப்பட்ட பொருள் கொண்டும் இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
நவரத்தினங்களில் பவழம் நோய்களைத் தீர்க்கும் குணமுடையது என்று நம்பப்படுகிறது. பிணிக்கு மருந்தே என்பதை உருவகமாகக் கொள்ளலாம். இந்து மத வழிபாடுகளில் சந்திரன் நவக்கிரக உறுப்பினராகக் கருதப்படுகின்றது. நவரத்தினங்களில் முத்து சந்திரனைக் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது. நிலவைக் கொண்டு வரப் பண் பாடும் பட்டர் அபிராமியை முத்து என்று அழைப்பதும் பொருத்தமாக இருக்கிறது.
சூரியனையும் சந்திரனையும் காதணிகளாகக் கொண்டவள் திரிபுர சுந்தரி என்று லக்ஷ்மி சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும் வருகிறது. அந்த வகையில் முத்தையும் நிலவுக் காதணியையும் கலந்து பட்டர் கற்பனை செய்ததாகக் கொள்ளலாம். நிலவே, நிலவின் ஒளியே, ஒளிரும் நிலவை அணியாகக் கொண்டவளே, ஒளிரும் அந்த நிலவையும் அழகுறச் செய்பவளே என்று அபிராமியைப் போற்றிப் பாடுவதாகவும் கருதலாம்.
அமரர் என்பதற்கு தேவர்கள் என்று அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்; முந்தைய பாடல்களில் தனக்கும் தன்னைக் காக்கும் கடவுளுக்கும் தாய் என்று அபிராமியைப் போற்றி, தேவரைப் போல் பிறவாமை வேண்டிப் பாடும் பட்டர் இங்கே அமரர் பெருவிருந்தே என்று தான் பெற நினைக்கும் விருந்தை எண்ணித் துதிப்பது சுவை. பிறவா நிலையடைந்தவர்களுக்கு பசியில்லை; அதனால் பட்டரின் கண்ணுக்கும் மனதுக்கும் அபிராமி பெரு விருந்தாக இருக்கிறார். பெரு விருந்து இங்கே பெரும்பேறு என்ற பொருளில் வருவதாகக் கொள்ளலாம்.
அரசன் திரும்பியவுடன் ஒன்று அபிராமியின் அருளால் நிலவு தோன்றித் தான் உயிர் பிழைத்தாலும் தொடர்ந்து அபிராமியைப் போற்றிப்பாடி வணங்கிக் கொண்டிருக்கலாம்; அல்லது உயிர் பிரிந்து அபிராமியைச் சேர்ந்து இனிப் பிறவாமை அடையலாம். இரண்டுமே அபிராமியின் அருள். அதனால் தான் அணுகாதவர்க்குப் பிணி, பிணிக்கு மருந்து என்றார். உன்னை நினையாதிருக்கும் வரை எனக்குத் துன்பம் தாயே, உன்னை மனதில் நினைத்த கணத்திலேயே துன்பத்திற்குத் துன்பம் தாயே என்கிறார். அதாவது அபிராமியை எண்ணாதிருக்கும் வரை உயிர் பிழைக்கும் எண்ணம் இருந்தது - உயிர் பிழைக்கும் எண்ணத்தினால் தானே அபிராமியை எண்ணிப் பாடத் தொடங்கினார்? அபிராமியை எண்ணி மனமுருகிப் பாடத்தொடங்கியதும் பட்டருக்கு உயிர் பிழைக்கும் எண்ணமே துன்பமாகி மாறிவிட்டது. பிறவியே தேவையில்லை என்று பாடத் தொடங்கிவிட்டார். இங்கே பிணியும் பிணிக்கு மருந்தும் அபிராமியின் அருளால் கிடைக்கப் பெறும் பிறவா நிலையைக் குறிக்கிறது.
உயிர் பிழைத்தாலும் போனாலும் அபிராமியே சரணமென்றிருப்பதால் இன்னொருவருக்குப் பணிந்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து பாடுகிறார். இங்கே 'பணியேன் ஒருவரை' என்பது அரசனைக் குறிப்பதாக நினைக்கிறேன். அபிராமியை நம்பி அரசனைக் கைவிட்ட கதை.
பிணி என்பதற்கு நோய் என்ற இயற்பொருளில் அறிஞர்கள் பலர் விளக்கம் சொல்லியிருக்கிறர்கள். பொதுவாகத் தன் இனத்தை மட்டும் பாதுகாக்கும் விதத்தில் மதங்கள் கடவுளைச் சித்தரிக்கின்றன. கிறுஸ்தவ, இந்து மதங்கள் இதற்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக சைவ மதத்தில் சிவனை தெய்வமென நம்பாவிட்டால் வயிற்று நோயிலிருந்து குஷ்ட, காச நோய்கள் வரை ஏற்படக்கூடிய இன்னல்களைப் பற்றித் தமிழ் மற்றும் வடமொழி இறையிலக்கியங்கள் மிரட்டுமளவுக்கு விவரமாகச் சொல்கின்றன. விஷ்ணு, சக்தி, மகாலட்சுமி போன்ற தெய்வங்களும் தன்னை நம்பியவருக்கு மட்டும் செல்வமும் செழிப்பும் வழங்குவதாகப் புராணங்களும் சுலோகங்களும் சொல்கின்றன. (பார்வதிக்கும் மகாலட்சுமிக்கும் ஏற்பட்ட மணமகள்-மைத்துனி விவாதம்/சண்டையைப் பற்றியப் புராணக் கதையையையும், அதை மையமாக வைத்து சரசுவதியையும் சேர்த்துப் பின்னிய பிரபலத் திரைப்படக்கதையையும் அறிவோம்.) இங்கே நம்பாதவருக்கெல்லாம் நோய் என்ற பொருளில் பிணி, பிணிக்கு மருந்து என்றிருக்கலாம் பட்டர். சரபோஜி அரசன் சக்தி உபாசகனா விஷ்ணுவை வழிபடுபவனா தெரியவில்லை; இங்கே அரசன் சக்தி உபாசகனாக மாற வேண்டிய அவசியத்தை மறைமுகமாகச் சொல்கிறார் பட்டர் என்பேன். அபிராமி அடியார்களைப் பகைக்க மாட்டேன் என்று முன்னர் சொன்னார்; பகைத்தால் தெரியும் செய்தி என்று இங்கே சொல்வதாக நினைக்கிறேன்.
'நவரத்தின ஒளி' என்ற கருத்தில் வரும் லக்ஷ்மி சஹஸ்ரநாம வரிகளும், 'மணியின் ஒளியே' என வரும் இந்தப் பாடலும் நம்பிக்கையுடன் துதிப்பவர்களுக்கு பெருஞ்செல்வத்தை வழங்கக் கூடியப் பாடல்கள் என நம்பப்படுகின்றன. மேலும், இந்தப் பாடல் தீராத நோய் தீர்க்க வல்ல சக்தியுடையது என்றும் நம்பப்படுகிறது.
கானடா ராகத்தில் கம்பீரமாகப் பாட முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். எத்தனையோ வருடங்களுக்கு முன் என் அம்மாவும் அவருக்குக் கற்றுக் கொடுத்த பாகவதரும் இந்தப் பாடலை வரிக்கு வரி ஒருவர் மாற்றி ஒருவர் பாடும் பொழுது மிகவும் ரசித்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நினைவுகளோடு என் அம்மாவின் குரலையும் பாடலையும் ரசிக்கிறேன்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 25 | பின்னே திரிந்து...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை