skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/02
மங்கலை செங்கலச...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:21 | ராகம்:கானடா
மங்கலை செங்கலச முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே.
மலையரசியும், அலை பாயும் கங்கை நதியை முடிமேல் தாங்கி நிற்கும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருப்பவளும், செப்பினாற் செய்தாற் போன்ற அளவான மார்பையும் குலுங்கும் பொன்னிற வளையல்கள் அணிந்த சிவந்த கைகளையும் உடையவளும், இளங்கொடி போன்றவளும், அனைத்துக் கலைகளுக்கும் சின்னமான மயில் போன்றவளுமான மங்களகரமான மஞ்சள் நிறத்தவளே காளியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.
'மலையாள், பொங்கு அலை கங்கை தங்கும் புரிசடையோன் புடையாள், செங்கலச முலையாள், வருணச் சங்கு அலை செங்கை உடையாள், பசும்பெண்கொடி, சகலகலா மயில், பிங்கலை! (அவளே) நீலி, செய்யாள், வெளியாள்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.
'வருணச்சங்கலை செங்கை' என்பதற்கு 'வெண்மையான சங்கு வளையல்களை அணிந்தவளே' என்றும், 'கடலில் தோன்றிய வேதங்களை சங்கு போல் வளையல்களாக அணிந்தவளே' என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'சகலகலா மயில்' என்பதற்கு 'மயில் போல் அழகானவளே', 'கலைகளை அறிந்தவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'மங்கலை' என்பதற்கு 'சுமங்கலியானவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'உடையாள்' என்பதற்கு 'அடியார்களைக் கொண்டவளே' என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
நீலி, செய்யாள், வெளியாள் முறையே கரிய, சிவந்த, வெள்ளை நிறங்கொண்டவர்களாகக் கருதப்படும் காளி, லட்சுமி, சரஸ்வதியைக் குறிக்கும் சொற்கள். வருணம் என்பதற்கு பொன் நிறம் என்றும் ஒரு பொருள். சங்கு என்பதற்கு வளை என்று ஒரு பொருள். புடை என்பதற்கு அருகில் என்றும் இடம் என்றும் பொருள். பிங்கலை என்பதற்கு பொன் நிறம் என்று ஒரு பொருள். பிங்கலை என்பதற்கு வலது மூச்சு என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் சிவனைத் தன் வலது மூச்சாக, வலது புறத்தவனாக, உடையவள் என்று கொஞ்சம் சுற்றிப் பொருள் கொள்ளலாம்; சுவையாக இருக்கும்.
அபிராமியைப் பலவாறாகவும் அனைத்து சக்தி வடிவாகவும் வர்ணிக்கும் பாடல். உட்பொருள் ஆழம் இல்லாத, எளிமையான பாடல். கொஞ்சம் பொறுங்கள். முலையாள், மலையாள், புடையாள், உடையாள், பிங்கலை, மங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பெண் கொடி எல்லாம் பொருந்துகிறது. மயில்? அபிராமியை மயிலென்பானேன்? உட்பொருள் ஆழம் இல்லையென்றா சொன்னேன்? அவசரம்.
மயில் போல் அழகானவளே, கலைகளை அறிந்தவளே என்று பொருள் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் மயிலைப் பற்றி அறிந்து கொண்டால் உவமை எங்கேயோ போவதைப் புரிந்து கொள்ளலாம். ஆதியில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி எனும் மூன்று தேவிகளுக்குத் தான் வாகனமாக இருந்ததாம் மயில்; முருகன் தனக்குத் தனித்தன்மை வாய்ந்த வாகனம் வேண்டும் என்று நினைத்தாராம்; தன்னால் மற்ற தேவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்று ஏற்பட்டதும், மயிலை வாகனமாக ஏற்றுக்கொண்ட தந்திரம் போதாதென்று வேறு எந்தக் கடவுளும் இனி மயிலை வாகனமாகக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனை போட்டு, மயிலைத் தனக்கே தனக்கென, தனிப்பட்ட வாகனமாக எடுத்துக் கொண்ட சாகசம் பற்றிய சுவையானப் புராணக் கதை இருக்கிறது. அதை விடுவோம். உலக மத-கலாசார-புராண-நம்பிக்கைகளில், மயிலுக்கு என்ன முக்கியத்துவம் என்று பார்ப்போமா?
எந்த நாடு, கலாசாரம், மதம் என்று பார்த்தாலும் - பெருமை, இறவாமை, மேன்மை, தூய்மை, அழகு மற்றும் பாதுகாப்பு - உலகெங்கும் இவைகளின் சின்னமாகக் கருதப்படுவது மயில்.
• ஹீரா எனும் பெண் கடவுள் ஆர்கசின் ஆயிரம் கண்களிலிருந்து மயிலைப் படைத்தாள் என்ற கிரேக்கப் புராணக் கதை சுவாரசியமானது. மயிலின் தோகை கடவுளரின் கண்களாகவும், மயிலின் தோகை வழியாக உலகைக் கண்காணித்து காப்பாற்றுவதாகவும் கதை
• இந்த உலகத்தில் இறந்தவர்கள் ஒரு நாள் தேவனின் உலகத்தில் மறுபடி பிறப்பார்கள் என்பது கிறுஸ்தவ மத ஆதார நம்பிக்கைகளில் ஒன்று. எல்லாவற்றையும் 'அறிந்து அருளும்' தேவாலயங்கள் மற்றும் 'மறுபிறப்பு, இறவாமை'ளின் சின்னமாக மயில் கருதப்படுகிறது
• புத்த மதத்தில், மயில் பெண் கடவுளின் சின்னமாகக் கருதப்படுகிறது. மயிலின் சீரான அழகு, மனிதன் தன் மனதை ஒரு நிலைப்படுத்திப் பக்குவப்படுவதைக் குறிப்பதாக எண்ணுகிறார்கள் புத்தத் துறவிகள். புத்தமதப் பெண்கடவுள் இறவாமையைத் தானாகவே விட்டுக் கொடுத்த கதை சுவாரசியமானது
• இஸ்லாம் மற்றும் 'க்ஹெம் வழிவகை' எனப்படும் செமெடிக்/பாலைவன மதங்கள் எல்லாவற்றிலும் அரச வாகனம், தேவ வாகனம் என்று மயில் வழிபடப்பட்டிருப்பதைப் பண்டைய ஜோர்டன், பாபிலோனிய, எகிப்து நாகரீகங்களிலும், நாடோடிக் கதைகளிலும், புராணங்களிலும் பார்க்கலாம்
• அழகு, ஆசையிலிருந்து காமம், கடவுள் என்று பல உணர்ச்சிகள், தேவைகள், பாவ புண்ணியங்கள், வடிவங்களுக்குச் சின்னமாக மயில் ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கருதப்பட்டு வந்திருப்பதை கூகிள் செய்து நேரம் கிடைக்கும் பொழுது படிக்கலாம்; சுவாரசியமாகப் பொழுது போகும்.
புனிதமானதாகவும் கடவுளுக்குச் சொந்தமானதாகவும் நினைத்ததால் பட்டர் அபிராமியை மயில் என்றார் என்று நினைக்கிறேன். அல்லது வழக்கமானத் தமிழ்ப் புலவன் போல் பெண்ணைப் பூவே, மானே, கிளியே, கொடியே, மயிலே என்றிருக்கலாம் (தொடர்ந்து மணியே, குயிலே என்கிறார்; பிறகு பார்ப்போம்).
இரு தரப்புக்கிடையிலான ஈர்ப்பையும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியையும் குறிப்பிடும் விதத்தில், 'பக்தர்கள் கார்மேகம், அம்பாள் மயில்' அல்லது 'அம்பாள் கார்மேகம், பக்தர்கள் மயில்' என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது.
இதுவே அம்பாள் மயிலான (என்) கதை. மயில் எனக்குப் பிடித்த பறவை. கானடா எனக்குப் பிடித்த ராகம். எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்தது, அம்மாவின் குரல்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 22 | கொடியே இளவஞ்சி...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை