skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/06/18
ததியுறு மத்தின்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:7 | ராகம்:பிலஹரி
ததியுறு மத்தின் சுழலும் என்னாவி தளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.
தாமரையை உறைவிடமாகக் கொண்ட பிரம்மன், நிலவைச் சடையிலே தாங்கி மகிழும் சிவன், திருமால் - என மூவரும் நாளும் வணங்கிப் போற்றும் பாதங்களை உடையவளே! குங்கும நிறப் பேரழகியே! கடையும் மத்தினைப் போல் என் உயிர் நிலையில்லாமல் சுழன்று ஒடுங்குவதைக் கண்டாய்; அந்நிலை மாறி நற்கதியடைய மனமிரங்குவாய்.
'கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் என்றும் வணங்கி துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே! ததியுறு மத்தின் சுழலும் என்னாவி கண்டாய், தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது' எனப்பிரித்து பொருள் சொல்லியிருக்கிறேன்.
வேணி என்பதற்கு சடை என்று ஒரு பொருளுண்டு. மதியுறு வேணி: நிலவைத் தாங்கிய சடை. சிந்துரானன சுந்தரியே என்பதற்கு செந்தூரத் திலகம் அணிந்தவளே என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் ஒரு சிறப்பான உவமையைக் கையாண்டிருக்கிறார் அய்யர். தயிர் கடையும் மத்தை அறிவோம். ஒரு பானையைக் கடைந்து முடித்ததும் இன்னொரு பானைக்கு எடுத்துச் செல்கிறோம். மத்துக்கு எப்படி ஓய்வே கிடைப்பதில்லையோ, பட்டருடைய உயிரும் அப்படி பிறவிக்கு பிறவி இன்னொரு உடலிலே குடியேறி வருந்துகிறதாம். பிறவிச் சுழற்சியில் ஓய்ந்து போகிறதாம். அப்படி பிறவியெடுத்து ஒடுங்கிப் போகாமல் நற்கதி அடைய அபிராமி மனது வைத்தால் முடியும் என்று வருந்தி வேண்டுகிறார். பிறவிச் சுழலினின்று விடுபட்டு நற்கதியடைய அபிராமி மனம் வைக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்.
மூன்று தெய்வங்களுக்கும் மூலாதாரமானவள் அபிராமி என்று பட்டர் முன்பே சொல்லியிருக்கிறார். "படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முப்பெரும் தொழில்களைச் செய்பவர்களே உன்னைத் தான் வணங்குகிறார்கள், அதனால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள உன்னைச் சரணடைந்தேன்" என்று அபிராமியை நாடுகிறார். அதாவது மேலதிகாரிகளின் பிடியிலிருந்து விடுபட முதலாளியிடமே தஞ்சமடைகிறார். "இது வரை சுழன்றது போதும், என்னை இனிப் படைத்து காத்து அழித்து எதுவும் செய்ய வேண்டாம் என்று உன் சிப்பந்திகளிடம் சொல்லடி சக்தி" என்று விண்ணப்பிக்கிறார்.
'பாசாந்தரி' என்று சௌந்தர்யலஹரியிலும் லலிதா சக்ஸ்ரநாமத்திலும் வருகிறது. 'மும்மூர்த்திகளும் வணங்கும் வைபவி' என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. இங்கே அவற்றை எடுத்தாண்டு, பிறவியைத் தயிருக்கும் உயிரை மத்திற்கும் உவமைகளாகச் சொல்லி மேலும் அழகுபடுத்தி, ஒரு எளிமையான இனிமையான கவிதையைக் கொடுத்திருக்கிறார் பட்டர்.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 8 | சுந்தரி எந்தை...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
▼
ஜூன்
(17)
அறிந்தேன் எவரும்...
மனிதரும் தேவரும்...
பொருந்திய முப்புரை...
சென்னி அது...
ததியுறு மத்தின்...
சுந்தரி எந்தை...
கருத்தன எந்தை...
நின்றும் இருந்தும்...
ஆனந்தமாய் என்...
கண்ணியது உன்...
பூத்தவளே புவனம்...
வந்திப்பவர் உன்னை...
தண்ணளிக்கு என்று...
கிளியே கிளைஞர்...
அதிசயமான வடிவுடையாள்...
வவ்விய பாகத்து...
வெளிநின்ற நின்...
►
ஜூலை
(31)
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை